இறால் மசாலா ஃபிரை …

by Lifestyle Editor

சிலர் இறால்களை மசாலா சேர்த்து பொறித்து எடுக்கின்றனர், சிலர் கிரேவி போல செய்கின்றனர். சிலர் கிரில் செய்தும் இறால்களை உண்ணுகின்றனர். எப்படி செய்தாலும் இறாலின் சுவை நம்மை மெய்மறக்கச் செய்யும். குறிப்பாக இறால்களில் புரதம் மற்றும் விட்டமின் பி6 ஆகியவை உள்ளன.

சுத்தம் செய்வது எப்படி?

இறால் பிரியர்களுக்கு இருக்கின்ற பெரிய சவால் அதை சுத்தம் செய்வது எப்படி என்று தெரியாது. அதனால் தான் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் ஆர்டர் செய்து சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இறால் சுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொண்டால் வீட்டிலேயே நாம் எளிமையாக சமைத்து சாப்பிட்டு விடலாம்.
சிலர் மீன் மார்க்கெட்டிலேயே இறால்களின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி வாங்கி வந்து விடுவர். ஆனால், அத்துடன் சுத்தம் செய்யும் காரியம் நிறைவு பெறுவதில்லை. ஒருவேளை முழு இறால்களாக வாங்கி வந்தாலும் கூட தலைப்பகுதி பிய்த்து எறிவதும், வால் பகுதியை கொஞ்சம் இழுத்தார் போல நீக்குவதும் எளிமையானது தான்.
ஆனால், இறாலின் மையப்பகுதியில் உள்ள அதன் இரை குடல் பகுதியை நீக்குவதுதான் சவாலானது. அதை நீக்காமல் சமைக்கும் பட்சத்தில் சாப்பிடும்போது நறுநறுவென கடிபடும். அத்துடன் அதில் உள்ள கழிவுகள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இறால் உடல் பகுதியின் முன்பக்கத்தில் லேசாக இரண்டாகப் பிளந்து, கருப்பாக தெரியும் அந்தக் குடலை மெதுவாக இழுத்து வெளியேற்றலாம்.
பிறகென்ன, எப்போதும் போல தண்ணீர் வைத்து அலசிவிட்டு இறால்களை உங்கள் விருப்பம் போல சமைத்து சாப்பிட வேண்டியதுதான். அதிலும் 20 நிமிடத்தில் தயார் செய்யக் கூடிய மசாலா ஃபிரை குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரை கிலோ இறால்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் – 2 நறுக்கியது, பெருஞ்சீரகம் – அரை டீ ஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு, சின்ன வெங்காயம் நறுக்கியது கால் கப் அளவு, தக்காளி – 1 நறுக்கியது, மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன், மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, எண்ணெய் – 100 மில்லி, எலுமிச்சை அரை பழச்சாறு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை :

சுத்தம் செய்த இறால் மீது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிசறி வைக்கவும். 10 நிமிடம் ஊறினால் போதுமானது.

கடாயில் எண்ணெய் ஊற்றி, இந்த இறால்களை பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயை சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மீண்டும் எண்ணெய் விட்டு அதில் பெருஞ்சீரகம் போட்டு பொறிக்கவும்.

பின்னர் கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரையில் வதக்கவும்.

வெங்காயம், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கிய நிலையில், பொறித்து வைத்த இறால்களை சேர்க்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வதக்கவும். பிறகு மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கிளறியபின் இறக்கி விடவும்.

Related Posts

Leave a Comment