பொங்கலுக்கு சமைக்கும் பாரம்பரிய புளி குழம்பு… 9 காய்கறிகள் போட்டு செய்வது எப்படி …

by Lifestyle Editor

தை பொங்கலுக்கு சில பேரின் வீட்டில், இந்த காய்கறி புளி குழம்பை பாரம்பரியமாக, வழிவழியாகப் பொங்கல் அன்று கட்டாயம் சமைக்கும் வழக்கம் இருக்கும். அதில் 5 காய்கறிகள் காய்கறிகள், 7, 9 காய்கறிகள், 11 காய்கறிகள் வரை கூட சேர்த்து இந்த குழம்பை செய்வார்கள். இன்று 9 காய்கறிகளை வைத்து பொங்கல் காய்கறி புளிக்குழம்பு வைப்பது எப்படி என்பதைப் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான காய்கறிகள்

1. வெள்ளை பூசணி, பரங்கி காய், அவரைக்காய், மொச்சை காய், கத்தரிக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முருங்கைக்காய்.

2. இந்த காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய், பரங்கிக்காய், மொச்சை பயிறு கண்டிப்பாக இருக்க வேண்டும். மற்ற காய்கறிகளை வேண்டுமென்றால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

தாளிக்க

கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், பெருங்காயம், கருவேபிள்ளை, கொத்தமல்லி தழை, எண்ணெய்

வதக்க

சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு

செய்முறை

1. இந்த காய்களை எல்லாம், தோல் சீவி, கொஞ்சம் பெரிய சைஸில் வெட்டி கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.

2. இப்போது குக்கரை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்க வேண்டும். இவை அனைத்தும் பொரிந்தவுடன் சின்னவெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் 2, பழுத்த தக்காளி 2, இவைகள் அனைத்தையும் காய்களுக்கு தகுந்தத அளவு போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

3. அடுத்தப்படியாக நறுக்கி வைத்திருக்கும் காய்கள் அனைத்தையும் குக்கரில் சேர்த்து விடவேண்டும். மாங்காய் இருந்தால் மட்டும் சேர்க்க வேண்டாம். இறுதியாக போட்டுக்கொள்ளலாம்.

4. இப்போது குழம்புக்கு தேவையான உப்பு, மஞ்சள் பொடியை போட்டு ஒரு வதக்கு வதக்கி, குழம்புக்கு தேவையான தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி ஒரே ஒரு விசில் விட்டால் போதும். காய்கறிகள் அனைத்தும் வெந்திருக்கும். தண்ணீரை நிறைய ஊற்றக் கூடாது.

5. ஒரு விசில் வந்ததும், குக்கரை திறந்து நன்றாக ஒரு முறை கிளறி விட்டு, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளையும் இதில் சேர்த்து விடுங்கள்.

6. இப்போது ஊற வைத்து கரைத்து வைத்துள்ள புளியை ஊற்ற வேண்டும். குழம்பு தளதளவென கொதித்து கட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

7. அந்த காலத்தில் இந்த குழம்பை நிறைய வைத்து அடுத்த நாள் வரை எடுத்து வைத்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது பொங்கல் தினம் மதியம் சாப்பிட்டு விட்டு மீதம் இருக்கும் குழம்பை அடுப்பில் வைத்து சுண்டவைத்து, சுண்ட குழம்பாக அடுத்த நாள் சாப்பிடுவார்கள். அதன் ருசி இன்னும் அதிகமாக இருக்கும். உங்க வீட்ல இந்த பொங்கலுக்கு இந்த குழம்பை ட்ரை பண்ணிபாருங்க.

Related Posts

Leave a Comment