நடுங்க வைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை.. உறையும் டெல்லி!

by Lifestyle Editor

வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகப்படியான பனிமூட்டம் நிலவுவது வழக்கம். அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் ஆட்டிப்படைத்து வருகிறது, தொடர்ந்து நான்காவது நாளாக கடும் குளிர் அலையை எதிர்கொண்டு வருகிறது டெல்லி. நகரின் மையப்பகுதிகளில் இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக 2 டிகிரிக்கு குறைவான அளவில் வெப்பநிலை பதிவானது. அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். 100 விமானங்கள், 43 ரயில்கள் தாமதமாக டெல்லிக்கு வந்தன.

டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்கள் குளிர் அலை மற்றும் கடுமையான பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக மக்கள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலே உண்டாகியுள்ளது.

இதன் காரணமாக டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. தனியார் பள்ளிகள் விடுமுறைக்குப் பின் செயல்பட இருந்தன. எனினும் 2 டிகிரிக்கு குறைவாக எலும்பை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளும் விடுமுறை விட அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல குளிர் அலை காரணமாக ஜார்கண்ட் மாநிலமும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் சில மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் இடங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளது.

Related Posts

Leave a Comment