திருமந்திரம் – பாடல் 1609 : ஆறாம் தந்திரம் – 3

by Lifestyle Editor

ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தன னந்தியே.

விளக்கம்:

இறைவனே குருவாக வருவதற்கு முன்பு அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற இந்த உலகத்து முட்டாள்களைப் போலவே யானும் இருந்தேன். என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்து காட்டி அருளினான். அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்து கொள்ளும் படி செய்து அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கி தமது சிவத் தன்மையை யானும் அறிந்து கொள்ளும் படி செய்து என்னுடன் வீற்றிருந்தார் குருநாதராக வந்த இறைவன்.

Related Posts

Leave a Comment