4வது நாள் ஆட்டம் நிறைவு – வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவை ..

by Lifestyle Editor

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4வது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், வங்கதேசம் அணி வெற்றி பெற இன்னும் 241 ரன்கள் தேவைப்படுகிறது.

வங்கதேச நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். இந்திய அணி 258 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கே.எல்.ராகுல் அறிவித்தார். இதனையடுத்து வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய அந்த அணி, பின்னர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. மீதமுள்ள ஒரு நாளில் வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 241 ரன்கள் தேவைப்படுகிறது.

Related Posts

Leave a Comment