இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 140 மில்லியன் கிலோவாக அதிகரிப்பு ..

by Lifestyle Editor

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியானது 122.18 மில்லியன் கிலோவில் இருந்து 140.28 மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது. இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்த தகவல் தெரிய வந்துள்ளது. முந்தைய ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 122.18 மில்லியன் கிலோவாக இருந்தது.

இது தவிர, இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.3,837.28 கோடி அளவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.3,353.35 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், காமன்வெல்த் ஆஃப் இண்டிபெண்டெண்ட் ஸ்டேட்ஸ் (சிஐஎஸ்) என்ற கூட்டமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக 30.56 மில்லியன் கிலோ அளவுக்கு தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சிஐஎஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கான ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

அர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் சிஐஎஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில நாடுகள் ஆகும்.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஏற்றுமதிக்கான கண்டெய்னர் விலை மற்றும் சரக்குப் போக்குவரத்து செலவுகள் அதிகமான காரணத்தால் தேயிலை ஏற்றுமதி மதிப்பு அதிகரித்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக தேயிலை இறக்குமதி செய்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 23.84 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 9.27 மில்லியன் அளவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் இந்தியாவிடம் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது, அந்நாட்டின் இறக்குமதி அளவு 157 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியில் சற்று குறைவு:

இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ள அதே வேளையில், மேற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பெரிய முன்னேற்றம் இல்லை. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக இந்த மந்த நிலை காணப்படுகிறது.

முந்தைய ஆண்டில் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 10.6 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது இது 16.40 மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு கடந்த ஆண்டு 4.05 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 3.55 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தியில் சீனா முன்னணியில் இருக்கும் சூழலிலும் இந்த அளவுக்கு அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கென்யா போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. கனடா, போலந்து, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment