உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் தானமாக வழங்கப்படும் – தந்தை அறிவிப்பு…

by Column Editor

உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மருத்துவ மாணவஎர் நவீனின் உடல் தானமாக வழங்கப்படும் என அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இன்று 24வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதலில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை. முன்னதாக போர் தொடங்கியதுமே உக்ரைனில் வசிக்கும் பிற நாட்டவர்களை மீட்க முடியாமல் அந்தந்த நாடுகள் திணறின. அந்தவகையில் அங்கு சிக்கியிருந்த 20 ஆயிரம் இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் கங்கா எனும் திட்டத்தை செயல்படுத்தியது.

உக்ரைன் வான்வெளி தடை செய்யப்பட்டிருந்ததால், அங்கிருந்தவர்கள் பேருந்து, ரயில் மார்க்கமாக அண்டை நாடுகளான போலந்து , ருமேனியா, ஹங்கேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அப்படி உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். 4 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த அவர், கார்கிவிலிருந்து தப்பிச் செல்ல ரயில் நிலையம் செல்ல முயன்ற போது வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தற்போது அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நவீனின் உடல் பெங்களூரு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அம்மாநில பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்நிலையில் நவீனின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன்பின்னர் மருத்துவ படிப்புக்காக தனது மகனின் உடலை தாவணகெரேவில் உள்ள எஸ்.எஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment