ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: பிரித்தானியா தகவல்!

by Column Editor

உக்ரைனிய படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாக, ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உக்ரைனில் தங்கள் தாக்குதலை தொடர்வதில் ரஷ்யப் படைகள் போராடிவருவதாக, பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ராணுவ தளவாட பிரச்சினைகள் தொடர்வதால், உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யப் படைகள் முன்னேற முடியாமல் தள்ளாடிவருகிறது.

ரஷ்யப் படையினரின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் மற்றும் வான்படை பற்றாக்குறை காரணமாக, அப்படையினருக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றை விநியோகிக்க இயலவில்லை.

இடைவிடாத உக்ரைனிய எதிர்தாக்குதல் காரணமாக, தங்களின் விநியோகச் சங்கிலியை காப்பதற்காக அதிகளவிலான ரஷ்யப்படைகளை திசைதிருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7,000 ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. ஆனால், 500க்கும் குறைவான ரஷ்ய படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment