பஞ்சாப்பின் 17வது முதல்வராக பொறுப்பேற்றார் பகவந்த் மான்…..

by Column Editor

பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 70 ஆண்டுகாலமாக கோலோச்சி வந்த சிரோன்மணி அகாலிதளம், காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக தன்னுடைய முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனில் நடக்காது என்றும், அதற்கு பதிலாக, பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் தான் நான் முதல்வராக பதவியேற்பேன் என்றும் பகவந்த் மான் கூறியிருந்தார். மேலும் பஞ்சாபில் இனி அரசு அலுவலகங்களில் முதலமைச்சர்களின் படங்கள் இடம்பெறாது என்றும், பகத்சிங், அம்பேத்கரின் படங்களே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று , சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் துரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பகவந்த் சிங் மான் புதிய முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராவார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை.

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இதனையொட்டி ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக பதவியேற்றுள்ள பகவந்த் கான், டிவி சேனல்களில் காமெடி கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டு முறை எம்.பியாக இருந்திருக்கிறார். அத்துடன் கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில், ஒரு மாநில கட்சியான ஆம் ஆத்மி கட்சி 2வது மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment