சோகத்தூர் ஜல்லிக்கட்டு போட்டி : 700 காளைகள், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

by Lifestyle Editor

தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 305 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 305 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டர். ஜல்லிக்கட்டு போட்டியை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து, முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, இளைஞர்கள் அடக்க முயற்பட்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.இந்த போட்டியின் இறுதியில் 21 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மாடுபிடி வீரர் கில்பர்ட், இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். நெய்க்காரப்பட்டியை சேர்ந்த குபேந்திரன், 17 காளைகளை பிடித்து 2ஆம் இடம் வகித்த நிலையில், அவருக்கு பிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல், 15 காளைகளை அடக்கி மூன்றாம் இடம்பிடித்த எருமப்பட்டி ஜெயக்குமாருக்கு, வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த காளைகளாக தேர்வான நாமக்கல் பண்ணைக்காரன்பட்டி காளை மற்றும் தருமபுரி கடத்தூர் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியின்போது காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவக்குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment