உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

by Column Editor

உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய 8 மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைனிலுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தற்போது தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் கிழக்கு பகுதியிலுள்ள இரண்டு பகுதிகளை சுதந்திர குடியரசுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment