சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், அதற்குள்ளாக 2ம் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது போன்ற தவிர்க்க முடியாத சூழல் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக 2 பருவங்களாக பொதுத்தேர்வு என்கிற முறையை சிபிஎஸ்இ கொண்டுவந்தது. அதன்படி 2021-2022 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வு முடிந்தவுடனேயே முடிவுகள் மற்றும் மதிப்பெண் வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். முன்னதாக ஜனவரி முதல் வாரம், பின்னர் 15 ஆம் தேதி , தொடர்ந்து ஜன 24 ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன.. ஆனால் 10 மற்றும் 13 ஆம் வகுப்பு முதல் பருவ ரிசல்ட் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
அதற்குள்ளாக இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)அறிவித்துள்ளது. இது மாணவர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தற்போது பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் நேரம் அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அவ்வாறு தேர்வு முடிவுகள் வெளியானால் அதனை அனைத்து மாணவர்களும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in அல்லது cbse.gov.in மூலம் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த முறை சிபிஎஸ்இ , தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ( பாஸ்), தேர்ச்சி பெறாத மாணவர்கள் ( ஃபெயில் ) என அறிவிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் செய்முறை மற்றும் தியரி ஆகிய 2 தேர்வுகளிலும் 33% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் நடைபெற்ற இந்த முதல் பருவத் தேர்வானது, மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளின் (எம்.சி.க்யூ) வடிவத்தில் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் சரியான பதில்களைக் கொண்ட answer keys வழங்கப்படும். அதன்மூலம் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ முதல் வருவ தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிமுறைகள்:
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in க்கு செல்லவும்
படி 2: முகப்புப் பக்கத்தில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு முடிவு 2022 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: தேர்வு எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிற சான்றுகள் போன்ற விவரங்களை அளிக்கவும்
படி 4: ‘லாக் இன்’ என்பதை அழுத்தவும்
படி 5: சிபிஎஸ்இ 10வது முடிவுகள் 2022 மற்றும் சிபிஎஸ்இ 12வது முடிவுகள் 2022 திரையில் காட்டப்படும்
படி 6: முதல் பருவ தேர்வு சிபிஎஸ்இ மதிப்பெண் தாளைப் பதிவிறக்கவும். – இந்த படிநிலைகளின் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்…