“மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்ல தடுப்பூசி தேவையில்லை”

by Lifestyle Editor

உருமாற்றமடைந்த கொரோனா வகைகளால் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. தற்போது கட்டாயம் என அறிவித்துவிட்டது. கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தியேட்டர்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கே அனுமதி எனக் கூறப்பட்டது.

இதனைப் பின்பற்றி வேலூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இதே அறிவிப்பை வெளியிட்டன. அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13ஆம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

1. கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது
2. கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்
3. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது
4. Whatsapp செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்
5. கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதிசெய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பக்தர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் இன்னும் சில நாட்களில் இந்த அறிவிப்பு மீண்டும் வரலாம் என சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment