சொன்னதை செய்த ராணுவம்.. அத்துமீறிய பயங்கரவாதிகள் – என்கவுன்டரில் போட்டு தள்ளிய வீரர்கள்!

by Lifestyle Editor

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் எப்போதுமே பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதற்காக தான் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் படைப் பரிவாரங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதையும் தாண்டி நாட்டுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுகிறார்கள். மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி காட்ட திட்டமிடுகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் ராணுவ தளபதி நரவானே முக்கிய தகவலை வெளியிட்டார்.

200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருப்பதாகக் கூறினார். அதேபோல கடந்த வாரம் காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை ஐஜி ராஜபாபு சிங்கும் இதே கருத்தை கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 135 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். யாராவது பயங்கரவாதிகள் இந்திய எல்லையை கடந்து உள்ளே புகுந்து, தாக்குதல் நடத்தினால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்” என்றார்.

சொன்னது போலவே இன்று ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஷாகித் வானி உட்பட ஐந்து பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பட்காம், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இருவேறு பிரிவாக சென்று தேடுதலில் இறங்கினர் பாதுகாப்பு படை வீரர்கள்.

அப்போது சிக்கிக்கொண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதில் தாக்குதலை இவர்களும் தொடுக்க 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ஷாகித் வானி என அடையாளம் காணப்பட்டது. எஞ்சிய நான்கு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment