மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் ஜிஎஸ்டி, சாலை வரி சலுகை – மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!

by Column Editor

நாகர்கோவில் குருசடியைச் சேர்ந்த கே.பரந்தாமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் நூறு சதவீத மாற்றுத்திறனாளி. அகஸ்தீஸ்வரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகள் கார் வாங்குவதற்கு ஜிஎஸ்டி, சாலைவரி, டோல் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில் எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டணம் விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தேன். ஆனால் எலும்பியல் தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே அதுபோன்ற சலுகை அளிக்கப்படும், மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண சலுகை வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எம்.சுந்தர் விசாரித்தார். மத்திய அரசு சார்பில், “மாற்றுத் திறனாளிகள் வாகனம் வாங்க சலுகை அளிக்கும் பரிந்துரைகள் தற்போது ஏற்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளன. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பித்த மத்திய அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலித்து ஜனவரி 31ஆம் தேதிக்குள் மனுதாரருக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Posts

Leave a Comment