பாய் வீட்டு பிரியாணி மணப்பதற்கு காரணம் இந்த ரகசிய பொடி தான். மணக்க மணக்க 3 பொருட்களை வைத்து பிரியாணி மசாலா பொடி அரைப்பது எப்படி.

by Column Editor

உணவு பட்டியலில் எல்லோருக்கும் பிடித்த உணவு என்றால், அதில் முதலிடம் பிடிப்பது இந்த பிரியாணி தான். உங்களுக்கும் பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? சமைப்பது பிடிக்குமா? சாப்பிட பிடிக்குமா? எப்படி இருந்தாலும் சரி, பாய் வீட்டு பிரியாணி மணப்பது போல நம் வீட்டிலும் பிரியாணி மணப்பதற்கு இந்த ஒரு பொடி இருந்தால் போதும். கடையில் வாங்கும் பிரியாணி பொடியில் பலவிதமான மசாலாப் பொருட்கள் சேர்த்து அரைக்கப்படுகின்றது. ஆனால் அப்படி இருந்தும் அதில் இருந்து நமக்கு சூப்பரான வாசம் கிடைக்காது. இந்த பாய் வீட்டில் போய் பிரியாணி சாப்பிட்டால் மட்டும், வாசம் மூக்கை இழுக்கும். அப்படி என்னதான் அந்த பிரியாணியில் சேர்க்கிறார்கள். நாமும் அந்த ரகசியத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வெறும் மூன்றே பொருள்தான். பட்டை, ஏலக்காய், கிராம்பு. சுருள் பட்டை – 100 கிராம், கிராம்பு – 50 கிராம், ஏலக்காய் – 50 கிராம், இந்த அளவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எல்லா பொருட்களையும் வெயிலில் நன்றாக காய வைத்துவிட்டு, அதன் பின்பு வெயிலில் காய்ந்த அந்த சூட்டிலேயே மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். அப்போதுதான் இந்த மசாலா பொடி நமக்கு நைசாக அரைத்து கிடைக்கும்.

ஒருவேளை வெயிலில் உலர வைக்க உங்களால் முடியவில்லை என்றால் என்ன செய்வது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடையை நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயில் இருக்கும் சூட்டிலேயே இந்த மூன்று பொருட்களையும் போட்டு வெதுவெதுப்பாக சூடு செய்து, அந்த சூடு இருக்கும்போதே அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு இந்த மூன்று பொருள்களையும் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

வெதுவெதுப்பான சூட்டோடு இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து அப்படியே எடுத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்க கூடாது. ஒரு காய்ந்த தட்டிலோ, பேப்பரிலோ இந்த பொடியை கொட்டி ஒரு நிமிடம் வரை ஆற வைத்து விட்டு, உடனடியாக ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். ரொம்ப நேரம் வெளியே திறந்த படி வைத்தாலும் இந்த பிரியாணி மசாலாவில் இருக்கும் வாசம் வெளியே போய்விடும். பிறகு பிரியாணியில் வாசம் அடிக்காது.

ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கூட இந்த பிரியாணி மசாலாவை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு கிலோ அரிசியில் பிரியாணி செய்தால், ஒரு ஸ்பூன் அளவு இந்த பிரியாணி மசாலாவை போட்டு சமைப்பது சரியான அளவாக இருக்கும். உங்களுடைய வாசத்துக்கு தகுந்தவாறு மசாலா பொடியை கூடவோ குறைத்தோ சேர்த்து பரிமாறுங்கள்.

பிரியாணிக்கு மட்டுமல்ல சால்னா, குருமா, சேர்வா, பாயா, போன்ற குழம்பு வகைகளுக்கும் இந்த பிரியாணி பொடி ஒரு நல்ல வாசத்தை கொடுக்கும். உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. அசைவ பிரியாணிக்கு மட்டுமல்ல. சைவ பிரியாணிக்கும் இந்த மசாலா பொடி அசத்தலான சுவையை கூடுதலாக தரும்.

Related Posts

Leave a Comment