பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் தமிழ் படங்கள்!

by Column Editor

ஒமிக்ரான் பரவல் காரணமாக பொங்கல் வரை வெளியாக இருந்த அனைத்து பெரிய படங்களும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. வலிமை, ராதே ஷியாம், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளன. இதைப் பயன்படுத்தி பொங்கலை டார்கெட் செய்து சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

கொம்பு வச்ச சிங்கம்டா:

சசிகுமார் நடிப்பில் நீண்ட நாட்கள் முன்பே தயாரான திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மடோனா செபஸ்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, மகேந்திரன், இந்தர் குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திபு நிணன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரானா காரணமாக வெளியாகாமல் இருந்தது. தற்போது ஜனவரி 13-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன்:

‘உறுமீன்’ படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் விதார்த் நடிப்பில் ‘கார்பன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக லட்சுமி ப்ரியா நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அச்சுமணி இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் டி.விஜய ராகவேந்திரா தயாரித்துள்ளார். இந்தப் படமும் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.

நாய் சேகர்:

காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ், தற்போது ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா நடித்துள்ளார். கிஷோர் ராஜ் இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்து வருகிறார்.

அஜீஷ் அசோக் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் ஒளிபதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் நாய் கதாபாத்திரத்திற்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். நாய் சேகர் படமும் பொங்கலை டார்கெட் செய்துள்ளது.

என்ன சொல்ல போகிறாய்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள அஸ்வின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம். இப்படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மற்றும் தேஜு அஸ்வினி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு விவேக் – மேர்வின் கூட்டணி இசையமைதுள்ளனர். ரிச்சர்ட் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் படம் முன்னரே வெளிவதாக இருந்தது. ஆனால் படத்தின் ஆடியோ வெளியீட்டில் அஸ்வினின் பேச்சு சர்ச்சையானதால் படக்குழுவினர் ரிலீசைத் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment