தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான்..

by Column Editor

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவிற்கு அடுத்து அதிக பாதிப்பிற்கு உள்ளான மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு இரட்டை சதமடித்திருந்த போதிலும், தமிழகத்தில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 89 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிலருக்கு லேசான ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டது. 13 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இந்நிலையில் மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக தற்போது உள்ளது. இவர்களில் சென்னையில் 26 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், மதுரை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “ தமிழகத்தில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. ஆனால் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. கொரோனாவை விட வேகமாக பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்போது மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடியதுபோல் ஒமைக்ரானையும் எதிர்த்து போராடியே ஆகவேண்டும். இந்த நேரத்தில் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம் தடுப்பூசிதான். மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வராது. மக்கள் கட்டுப்பாட்டால் ஒமைக்ரானையும் கட்டுப்படுத்தி விடலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக டெல்லி, மகாராஷ்டிராவிம் தலா 57 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment