ஒரே நாளில் யூடியூபில் மாஸ் காட்டிய சூர்யா…

by Column Editor

‘வாடா தம்பி’ பாடல் வெளியான ஒரே நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘வாடா தம்பி’ (vaada thambi) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத்தும், ஜிவி பிரகாஷும் இணைந்து பாடியுள்ளனர். அவர்கள் இணைந்து பாடுவது இதுவே முதன்முறை. இடையிடையே சூர்யாவின் அசத்தல் நடனத்துடன் கூடிய இப்பாடலின் லிரிக்கல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார். இதில் ‘நமக்கொரு பாதை.. அவசியம் தேவை’ என்ற வரியும் இடம்பெற்று உள்ளது. இந்த வரிகள் நடிகர் சூர்யாவின் அரசியல் எண்ட்ரியை சூசகமாக அறிவிக்கும் விதம் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment