திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை!

by Lifestyle Editor

தமிழ்நாட்டிலுள்ள சிவன் தலங்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு கார்த்திகை மாதம் நடைபெறும் மகா தீப திருவிழா சிறப்புவாய்ந்தது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தாலும், இந்த திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் இந்தாண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்றாம் அலை அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டும் அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தீப திருவிழா பக்தர்களின்றி நடத்தப்படவிருக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அய்யங்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும். தீபத் திருவிழா நடைபெறும் 17 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. சிறப்பு பேருந்து மற்றும் ரயில் இயக்கப்படாது.

ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை. பவுர்ணமி மற்றும் மகா தீபத் திருநாள் என நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ம் தேதி வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நவ.7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி. 17ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு தினசரி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இலவச தரிசனத்துக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. 3 ஆயிரம் உள்ளூர் பக்தர்களுக்கான அனுமதி சீட்டு, சிறப்பு மையங்கள் மூலம் நேரடியாக வழங்கப்படும். மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம் இந்தாண்டும் நடைபெறாது. மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment