10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு… புதிய அறிவிப்பு…

by Lifestyle Editor

தமிழகத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 8) நிறைவு பெறுகிறது. கடைசி தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. அடுத்தகட்டமாக விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆசிரியர்கள் தேர்தல் பணிகள் ஈடுபடுத்தப்படுவர்.

எனவே தேர்தல் முடிந்ததும் விடைத்தாள் மதிப்பீடு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மார்ச் – ஏப்ரல் 2024ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்ய கல்வி மாவட்டங்கள் தோறும் மதிப்பீட்டு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

இதில் தங்கள் மாவட்டங்களில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கேற்ப மதிப்பீட்டு பணிகளை முடிக்க வேண்டும். அதற்கு தேவையான ஆசிரியர்களை பாட வாரியாக அல்லது பயிற்று மொழி வாரியாக தேர்வு செய்து, அவர்களுக்கு பணி விடுவிப்பு அளிக்க வேண்டும். உரிய நேரத்தில் மதிப்பீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்யும் விதிமுறை அமலில் இருக்கிறது. அதன்படி, மதிப்பீட்டு முகாம்களில் பெறப்படும் விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ், ஆங்கில வழி ஆசிரியர்கள் உரிய எண்ணிக்கையில் நியமனம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட நாள்களை இலக்காக நிர்ணயம் செய்து மதிப்பீட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.

இதில் கால தாமதம் ஏற்படக் கூடாது. இதற்காக தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு , அரசு நிதியுதவி பெறும், தனியார் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்ளலாம். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடுபடாது பார்த்து கொள்ள வேண்டும். இதையொட்டி பட்டியலை தயார் செய்து, அதை சரிபார்த்து ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

ஒரு கல்வி மாவட்டத்தில் தேவைக்கேற்ப இரண்டு மதிப்பீட்டு முகாம்கள் அமைத்து கொள்ளலாம். அதற்கேற்ப விடைத்தாள் மதிப்பீடும் ஆசிரியர்களை சரியாக நியமனம் செய்வது அவசியம். எந்தெந்த ஆசிரியர்களுக்கு என்னென்ன பொறுப்பு என்பதை தெளிவாக வரையறை செய்து செயல்படுத்த வேண்டும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் நியமன ஆணைகள் வழங்கிவிட வேண்டும். இதன்மூலம் மதிப்பீட்டு பணிகளுக்கு ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment