இன்று முதல் வீடு, வீடாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

by Column Editor

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கிய கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஒன்றே தற்போதைய தீர்வாக உள்ளது. இது குறித்த பல வதந்திகள் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ முயன்றும் பொதுமக்கள் செலுத்திக்கொள்ள தயங்கி வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு கடந்த மாதம் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தியதால் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 31 சதவீதம் பேருக்கு 2ஆவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. முதல் தவணை 100% பேருக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியதும் போட நடவடிக்கை எடுக்கப்படும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது வார நாட்களில் கொரோனா தடுப்பூசி போடுகிறவர்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் மருத்துவர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கவுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment