பிரசவத்திற்கு பின் ஏற்படும் இடுப்பு வலிக்கு என்ன காரணம்.. நிவாரணம் பெறுவது எப்படி?

by Editor News

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் கர்ப்பம் என்பது ஒரு அழகிய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணி பெண் தனக்குள் ஓர் உயிர் இருப்பதை உணர்ந்து ஒவ்வொரு செயலையும் மிகவும் கவனத்துடன் செய்கிறார்கள். கர்ப்பம் அதிக அசௌகரியங்கள் மிகுந்தவையாக இருந்தாலும், தாயாகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்து ஒவ்வொரு நாளையும் ரசித்து கடந்து செல்கிறார்கள். கர்ப்பம் போன்றே பிரசவத்துக்கு பிறகும் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் இடுப்பு வலி. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

​பிரசவத்திற்கு பின் இடுப்பு வலி​

கர்ப்பம் மற்றும் பிரசவம் ஒரு பெண்ணின் உடலில், குறிப்பாக இடுப்பு எலும்புகள் மற்றும் மென்மையான திசுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட 70% தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின் இந்த இடுப்பு வலியை அனுபவிக்கிறார்கள்.

இந்த வலியானது லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் அந்தரங்கப் பகுதி, பிறப்புறுப்பு பகுதி, விலா எலும்பு, முதுகெலும்பு மற்றும் அடிவயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த இடுப்பு வலியை அனுபவிக்கலாம். இந்த இடுப்பு வலிக்கான காரணங்கள் தான் என்ன?

கர்ப்பம் பிரசவத்துக்கு பிறகு இடுப்பு வலியை உண்டு செய்யுமா?​

கர்ப்ப காலத்தில், இடுப்பு பகுதியில் உள்ள தசைநார்கள் மற்றும் மூட்டுகளை தளர்த்த உடலில் ‘ரிலாக்சின்’ என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் பிரசவத்திற்கு உடலை தயார்படுத்த உதவுகிறது.

இத்தகைய ஹார்மோன் மாற்றங்கள் இயற்கையானவை என்றாலும் கூட, சில சமயங்களில் இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளின் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கலாம். இது பிரசவத்திற்குப் பின் இடுப்பு வலியை உண்டாக்கலாம்.

இடுப்பு எலும்பு பிரச்சனைகள்​

பிரசவத்தின் போது குழந்தை பிறப்புறுப்பை நோக்கி நகரும், ​​அப்போது அந்தரங்க எலும்பு அதிகமாக விரிவடையும். அது இடுப்பு எலும்புகளில் காயம் அல்லது முறிவுகளை ஏற்படுத்தலாம்.

இதுவும் பிரசவத்திற்கு பிறகு இடுப்பு வலியை உண்டாக்கும். ஆனால் இந்த வலியானது தொடர்ந்து நீடித்தால் எலும்பு முறிவுகளை சரிபார்க்க எக்ஸ்ரே செய்துக்கொள்வது சிறந்தது.

சிம்பசிஸ் ப்யூபிஸ் செயலிழப்பு என்றால் என்ன​

சிம்பசிஸ் ப்யூபிஸ் செயலிழப்பு என்பது கர்ப்பக் காலத்தில் குழந்தை வளரும் போது, வயிற்றில் போதுமான அளவு இடமளிக்க இடது மற்றும் வலது இடுப்பு எலும்புகள் தளர்வடைகிறது. அப்போது ஏற்படும் வலியை குறிக்கிறது.

இத்தகைய வலியானது இரண்டாவது ட்ரைமெஸ்டரின் மூன்றாவது மாதங்களில் (Second Trimester) உணரப்படுகிறது. இது பிரசவத்திற்கு பிறகு குறையக்கூடும், சிலருக்கு மிகுந்த வலியை உண்டாக்கக் கூடியது.

​பிரசவத்துக்கு பிறகு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இடுப்பு வலி உண்டாகுமா?​

உடலில் கால்சியம், வைட்டமின் டி அல்லது பி12 இல்லாததன் விளைவாகவும் பிரசவத்திற்கு பின் இடுப்பு வலி ஏற்படலாம். அதாவது பிரசவம் ஒரு பெண்ணின் உடலில் வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இது எலும்புகளின் உறுதியை குறைத்து, எளிதில் வலியை ஏற்படுத்தும். பிரசவத்துக்கு பிறகு ஊட்டச்சத்து குறைபாட்டை அறிந்து அதை சரி செய்தால் மட்டுமே இடுப்புவலியை தடுக்க முடியும்.

​பெரினியம் கிழியல்​

பெரினியம் என்பது யோனி திறப்புக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதி ஆகும். குழந்தையின் தலை யோனி திறப்பின் வழியாக வெளியே வரும்போது பெரினியம் பகுதியானது கிழிய தொடங்கும். இதுவும் கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தும். எனினும் இது தற்காலிகானது. ,இது குணமடைய 6 வாரங்கள் வரை ஆகலாம். அதற்கு பிறகு படிப்படியாக இடுப்பு வலி குறைய தொடங்கும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் இடுப்பு வலியானது லேசானதாக இருக்கும்பட்சத்தில், வீட்டிலேயே சிகிச்சையளிக்க சில வழிகள் இருக்கின்றன. இவை இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெற செய்யும்.

​பிரசவத்துக்கு பிறகு ஹீட் தெரபி செய்வதால் இடுப்பு வலி குறையுமா?​

இடுப்புப் பகுதியில் வலி அதிகமாக இருந்தால், சூடான கம்ப்ரஸ் அல்லது ஹீட்டிங் பேடைப் பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்யலாம். இது, இறுக்கமான தசைகளைத் தளர்த்தி வலியைக் குறைக்க உதவும். பொறுக்கும் சூட்டில் இருக்க வேண்டும். அதிக சூடு வைக்க வேண்டாம்.

​இளந்தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்ய என்ன செய்வது?​

பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க தாய்மார்கள் டயட் கடைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வைட்டமின் டி, பி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். இது இடுப்பு வலி வேகமாக குணமடைய உதவும்.

ஒருவேளை உடலில் கால்சியம் சத்து குறைவாக இருந்தால், கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். மேலும், உடலில் வைட்டமின் டி கிடைக்க தினமும் காலை நேரத்தில் சூரிய ஒளியில் 30 நிமிடங்களாவது நிற்க வேண்டும்.

பிரசவத்துக்கு பின்பு இடுப்பு வலி குறைய உடற்பயிற்சி செய்யலாமா?​

பிரசவம் முடிந்து 6 மாதங்களுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாம். சுகப்பிரசவம் எனில் ஒரு மாதத்தில் மிதமான பயிற்சிகள் செய்யலாம். எனினும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அதே நேரம் 20 நிமிடங்களுக்கு லேசான நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது விரைவாக இடுப்பு வலியை குறைக்க உதவும்.

​பிரசவத்துக்கு பின்பு இடுப்பு வலி குறைய ஓய்வு அவசியம்​

உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முன்பை விட இப்போது போதுமான ஓய்வு அவசியம். எனவே, தொடர்ந்து பல மணிநேரம் கடின வேலை அல்லது செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுங்கள்.

பிரசவத்துக்கு பிறகு இடுப்புவலிக்கு வலி நிவாரணி எடுக்கலாமா?​

ஓவர்-தி-கவுன்டர் வலி நிவாரணிகள் இடுப்பு வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்க உதவுகின்றன. இருப்பினும், நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

எனினும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இடுப்பு வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அவை தீவிரமானதாக இல்லை என்றாலும், சில சமயங்களில் மற்ற உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கலாம். எனவே, இடுப்பு வலி ஒரு மாதத்திற்கு மேல் குறையாமல் தொடர்ந்தாலோ அல்லது வலி அதிகரித்தாலோ மருத்துவர், ஆஸ்டியோபதி அல்லது உடல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Related Posts

Leave a Comment