கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழம் சாப்பிடலாமா..?

by Editor News

கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது என பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கான காரணம் மற்றும் உண்மை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

சுவை மிகுந்த பழங்களில் பலாப்பழமும் ஒன்று. குறிப்பிட்ட சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் பலாப்பழத்திற்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. பொதுவாக பழங்கள் அனைத்துமே ஆரோக்கியமானதுதான். உடல் பலவீனமாக இருப்பவர்கள், உடல் மெலிந்து காணப்படுவோர் பலாச் சுளையை சாப்பிடும்போது, ஆரோக்கியமான உடல் பருமனை கொள்வார்கள் என்று கூறப்படுவதோடு, பலாப்பழம் மலச்சிக்கலை போக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகளை கொண்டுள்ள பலாப்பழம் குழந்தைகளுக்கு ஊட்டம் அளிக்கும் என்ற நிலையில், அதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால், பல காலமாக மக்கள் நம்பும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள். பலாப்பழத்தை சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறும் மருத்துவர்கள், எதையுமே அளவோடு சாப்பிடுவது நல்லது என்கிறார்கள்.

வயிற்றுப் பிரச்சனைகள் தீரும்

பலாப்பழம் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, அது எளிதில் செரிமானம் ஆகும் என்பதால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளும் தீரும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்

பலாப்பழத்தில் கால்சியம், துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் இருப்பதால், அது வயிற்றில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு பேருதவி செய்யும் என்றும், பலாப்பழத்தில் இருக்கும் இரும்புச் சத்து, குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், பலாப்பழம் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சோர்வை தீர்க்கும்

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கடும் சோர்வு ஏற்படும். அந்த நேரங்களில் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. எனவே, கர்ப்பக் காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

செரிமானத்தை தூண்டும்

கர்ப்பக் காலத்தில் பெரும்பாலான பெண்கள் மலச்சிக்கலால் அவதிப்படுவர். செரிமானப் பிரச்சனை காரணமாகவே, பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பலாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இந்த பழமும், இதனுடன் சாப்பிடும் மற்ற உணவுகளும் எளிதில் செரிமானம் அடைகிறது. இதனால், மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுபடலாம்.

மன அழுத்தத்திற்கு தீர்வு

கர்ப்பக் காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு பல்வேறு விதமான மன அழுத்தங்கள் ஏற்படும். எனவே, மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள், தியானம் மற்றும் யோகா ஆகியவற்றில் ஈடுபடலாம். அத்துடன் மன அழுத்தத்தை குறைக்க, பலாப்பழம் போன்ற சிறந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அதில் இருக்கும் புரதம் மற்றும் பல்வேறு நுண்ணூட்டச் சத்துகள், மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகின்றன.

நோயெதிர்ப்பு சக்தி

கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடல் நிலை மிகவும் வலு குறைந்து காணப்படும். அத்துடன், நுண்ணூட்டச் சத்துகளின் பற்றாக்குறையும் இருக்கும். இதனால், எளிதில் நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, கர்ப்பிணிகள் பலாப்பழத்தை சாப்பிடும்போது, அதில் இருக்கும் பல்வேறு சத்துகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி, நோயில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி செய்கிறது.

யார் சாப்பிடக் கூடாது?

பலாப்பழத்தின் சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும், கர்ப்பக் காலத்தில் அதிக சர்க்கரையால் அவதிப்படும் பெண்களும் இதை தவிர்க்க வேண்டும்.

பலாப்பழம் ரத்தம் உறைதலை விரைவுபடுத்தக் கூடியது எனக் கூறப்படுவதால், ரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment