கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை..

by Lifestyle Editor

கோடைகாலம் துவங்கியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த கடும் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய பாதுகாப்பு குறிப்புகளை கடைபிடிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

அனல் காற்று வீசும் நேரமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடியாத சூழலில் வெளியில் செல்லும்போது உடன் குடிதண்ணீர் எடுத்துக்கொண்டு குடை பிடித்து, காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும்.

மேலும், வீட்டிலும் நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எழுமிச்சை சாறு போன்ற பானங்களை அறுந்த வேண்டும். வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். குழந்தைகளை காரில் தனியாக விட்டு செல்ல கூடாது. காரில் கதவு அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் வாகனத்தின் உள்ளே வெப்பம் அதிகமாகி குழந்தைகளுக்கு அபாயமாக அமையலாம்.

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உருவாகின்றன என்பதை கண்டறிய வேண்டும். குழந்தைகளின் சிறுநீரினை சோதித்து பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீர் இழப்பை குறிக்கும். அதுபோன்ற அறிகுறி தென்பட்டால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனே குழந்தைகளை அழைத்துச் செல்லவும்.

வீடுகளில் இருக்கும் முதியோர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தனியாக இருக்கும் முதியவர்களுக்கு தொலைபேசி அருகில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும். குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவெளியில் நீர் அருந்த வேண்டும். வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால் ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment