134
சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)
பச்சிமத் திக்கிலே வைச்ச வாசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற வப்பொரு
ளுச்சிக்குக் கீழது வுண்ணாவுக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.
விளக்கம்:
மேல் திசையிலே இறையருளால் வைக்கப் பட்ட குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது தினமும் தன்னை நினைத்துக் கொண்டே இரு என்று அருளிய அந்த பரம்பொருளின் வடிவமானது உச்சந் தலைக்கு கீழ் உள்ள இடத்திலும், வாய்க்கு உள்ளே இருக்கின்ற அண்ணாக்குக்கு மேலே உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில் இறையருளால் வைக்கப் பட்ட திருவடிகளாக இருக்கின்றது. வாய் திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்.