முடி கொட்டுவதை கட்டுப்படுத்தும் வைத்தியம்..

by Lifestyle Editor

முடி உதிர்தல் என்பது எல்லா வயதினரையும், எல்லா பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. மரபியல், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்ற காரணிகள் முடி உதிர்தலை உண்டு செய்யகூடியவை. மரபணு காரணம் தவிர மற்ற காரணங்களை கண்டிப்பாக தவிர்த்துவிட முடியும். இயன்றவளவு கட்டுப்படுத்திடவும் முடியும். முடி உதிர்வுக்கு காரணமான விஷயங்கள் என்ன என்பதை அறிந்து கட்டுப்படுத்துவதோடு இந்த இயற்கை குறிப்புகளையும் பின்பற்றுவது பாதுகாப்பானது.

​தலைக்கு மசாஜ் ஏன் அவசியம்​:

தலைக்கு மசாஜ் செய்வது என்பது உச்சந்தலையிலும் முடியின் வேர்க்கால்களிலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பிறந்த குழந்தை முதல் அனைவரும் இதை செய்துவருவதன் மூலம் முடியின் ஆரோக்கியம் மேம்படும். முடி வளர்ச்சி வேகமாக இருக்கவும் முடி உதிர்தல் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை உச்சந்தலையில் மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். விரல்களில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தொட்டு மசாஜ் செய்யலாம். காலை மற்றும் இரவு நேரங்களில் மசாஜ் செய்வது முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்

​முடி உதிர்வுக்கு நெல்லிக்காய் பொடி பேஸ்ட்​:

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் முடி உதிர்வுக்கு பெரிதும் உதவும் என்கிறது ஆயுர்வேதம். முடி தீர்வுகளில் ஆயுர்வேதத்தில் இவை பிரபலமான பொருள். நெல்லிக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் தாதுக்கள் நிறைவாக உள்ளன. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் இவை ஒவ்வொரு முடி இழைகளையும் வலுப்படுத்துகின்றன.

நெல்லிக்காயை கொண்டு கூந்தல் தைலம் செய்து பயன்படுத்தலாம். நெல்லிப்பொடியை ஹேர் பேக் போட பயன்படுத்தலாம். நெல்லிக்காயை உள்ளுக்கு எடுக்கலாம். தொடர்ந்து நெல்லி சேர்த்து வருவது முடி உதிர்வை கட்டுப்படுத்த செய்யும்.

முடி உதிர்வுக்கு வெந்தயம்​:

வெந்தயம் உஷ்ணத்தை தணிக்கும் அற்புதமான மூலிகை. முடி உதிர்வுக்கு சிறந்த இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படும் வெந்தயம் கூந்தலுக்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவக்கூடியது. வெந்தய விதைகளில் புரதங்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் மயிர்க்கால்களை திறம்பட பலப்படுத்துகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

வெந்தயத்தை சிகைக்காயில் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். வெந்தயத்தை பொடித்து கூந்தல் தைலத்தில் பயன்படுத்தலாம். வெந்தயத்தை மற்ற மூலிகைகளுடன் கலந்து ஹேர் பேக் ஆக பயன்படுத்தலாம். வெந்தயத்தை உடல் குளிர்ச்சியானவர்கள் கோடையில் மட்டும் பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் தவிர்க்கலாம. அல்லது கவனமாக பயன்படுத்தலாம்.

முடி உதிர்வு தடுக்க தேங்காய்ப்பால்​:

தேங்காய்ப்பால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது முடி உதிர்தலை தடுக்கவும் செய்யும். தேங்காய்ப்பால் முடிக்கு பிரகாசம் அளிக்கிறது. முடி வறட்சி இல்லாமல் செய்வதால் முடியை வழவழப்பாக பளபளப்பாக வைத்திருக்க செய்யும். வறட்சி குறைந்தால் முடி உதிர்வு அசாதாரணமாக இருக்காது.

தேங்காய்த்துருவலை நீர்விடாமல் அரைத்து பால் எடுத்து கொள்ளவும். பருத்தி உருண்டையில் இதை நனைத்து உச்சந்தலையில் ஒற்றி ஒற்றி எடுக்கவும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் வகையில் முடியை வலுப்படுத்தவும் செய்கிறது.

​முடி உதிர்வுக்கு வெங்காயச்சாறு​:

வெங்காயச்சாறு. முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகை என்று கூட இதை சொல்லலாம். இது பூஞ்சைத்தொற்றை தடுக்கும் பண்புகளை கொண்டவை. உச்சந்தலையில் பாக்டீரியா தொற்றுகள் வராமல் தவிர்க்க இவை உதவும். இதில் இருக்கும் கந்தகம் ஆனது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முடி வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.

வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை வெங்காயச்சாறை எடுத்து பருத்தி உருண்டையை சாற்றில் நனைத்து உச்சந்தலையில் வைத்து ஒற்றி எடுக்கவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். தொடர்ந்து பயன்படுத்தினால் பலன் தெரியும்.

​முடி உதிர்வுக்கு முட்டை மாஸ்க்​:

முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். முடி உதிர்வதை தடுக்க ஆரோக்கியமாக முடி வளர முட்டை போதுமானதாக இருக்கும். எல்லா வகை முடிக்கும் முட்டை பயன்படுத்தலாம். முட்டை மயிர்க்கால்களை வலுப்படுத்த செய்வதால் முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.

முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து அடிக்கவும். உச்சந்தலையில் முட்டையின் கலவையை நன்றாக தடவி 20-30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். மாதம் ஒரு முறை இதை செய்து வந்தால் முடி உதிர்தல் நன்றாக கட்டுப்படும்.

​பூந்திக்கொட்டை மற்றும் சிகைக்காய்​:

இதன் நன்மைகள் குறித்து பலமுறை எழுதியிருக்கிறோம். சோப்நட் என்று அழைக்கப்படும் பூந்திக்கொட்டையை இப்போதைய நிலைக்கேற்ப ஷாம்புவாக செய்து பயன்படுத்தலாம். சிகைக்காய் பவுடர் கடைகளில் கிடைக்கிறது என்றாலும் வீட்டில் தயாரித்து பயன்படுத்தலாம். முடி உதிர்வை தடுக்க நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்களில் இவை முக்கியமானது.

3 மாதங்களுக்கு ஒரு முறை சிகைக்காய் பூந்திக்கொட்டை கலந்த பொடியை தயாரித்து வைத்து பயன்படுத்தலாம். இவை முடியை உச்சந்தலையை இயற்கையாக சுத்தம் செய்யும். சிகைக்காய் காரத்தன்மை கொண்டது என்றாலும் உச்சந்தலையின் சமநிலையின்மையை பராமரிக்க செய்கிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடியின் தண்டுகளை வலுப்படுத்த செய்கிறது.

Related Posts

Leave a Comment