ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 13

by Lifestyle Editor

திருப்பாவை பாடல் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :

பொல்லாத அரக்கர்களை சிறிய புற்களை கிள்ளவதை போல் எளிதாக அளித்த நம்முடைய கண்ணனின் புகழினை பாடிடுவதற்காக பிள்ளைகள் அனைவரும் எழுந்து விட்டார்கள். நட்சத்திரங்களும், நிலவும் சென்று பொழுது விடிய துவங்கி விட்டது. புற்கள், மரம் செடி கொடிகள் தங்கள் மீது படர்ந்திருக்கும் பனியை நீக்கி, எழுந்து விட்டன. நீ மட்டும் குளிர்கிறது என போர்த்திக் கொண்டு படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாயே. பெண்ணே, இறைவனை வணங்கி, அவனுடைய புகழை பாடுவதற்காகவே நாம் படைக்கப்பட்டோம். ஆனால் இறைவனுக்கான நேரங்களை எல்லாம் இந்த பொல்லாத தூக்கம் திருடிக் கொண்டு போகிறது. அப்படி திருடாமல் தடுக்க, தூக்கத்தில் இருந்து எழுந்து கொள் பெண்ணே.

விளக்கம்:

கள்ளம் தவிர்ந்து என இந்த பாடலின் முடிவில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

நம்முடைய வாழ்நாள் என்பது இறைவனை நினைத்து, அவனை போற்றி பாடி, இறை தொண்டுகளையும், தான தர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்களை செய்வதற்காக படைக்கப்பட்டது தான். இதை உணராமல் மனிதர்கள் வீணாக பேசியும், மற்ற விஷயங்களில் செலுத்திலும் பொழுதை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாயையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என கூறுகிறாள் ஆண்டாள் நாச்சியார். அதோடு ஓரறிவு, ஈரறிவு ஜீவன்கள் கூட அதிகாலையில் எழும் போது மனிதர்கள் மட்டும் வருடத்தின் அனைத்து நாட்களும் பலவிதமான காரணங்களை சொல்லி, தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்கிறார்.

Related Posts

Leave a Comment