லியோ திரைவிமர்சனம்

by Lankan Editor

7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில் தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலக அளவில் ரூ. 188 கோடி வரை வசூல் செய்யும் அளவில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் LCU-வா, இல்லையா அப்படி LCU-வாக இருந்தால் கைதி படத்திலிருந்து யார் யாரெல்லாம் வர போகிறார்கள், விக்ரம் படத்தில் இருந்து எந்தெந்த கதாபாத்திரம் லியோவில் என்ட்ரி கொடுக்க போகிறது என உச்சத்தில் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படி லியோ படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு முழுமையாக லியோ பூர்த்தி செய்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
காஷ்மீரில் காஃபி ஷாப் வைத்து நடத்தி வரும் பார்த்திபன் [விஜய்] தனது மனைவி திரிஷா, மகன், மகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அமைதியாக செல்லும் அவர்களுடைய வாழ்க்கையில் மிஸ்கின் மற்றும் சாண்டி Gang மூலம் பிரச்சனை ஏற்படுகிறது.

இதில் சிக்கிக்கொள்ளும் விஜய்யின் அடையாளம் பத்திரிகைகள் மூலம் தாஸ் & Co-விற்கு தெரியவர, லியோ இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என ஆண்டனி தாஸ் [சஞ்சய் தத்] லியோவை கொல்வதற்காக காஷ்மீர் செல்கிறார்.

தன்னை சுற்றி இருக்கும் பலர் ‘நீ லியோ தான்.. நீ லியோ தான்..’ என்று கூறினாலும், ’நான் லியோ இல்லை, பார்த்திபன் தான்’ என உறுதியாக இருக்கிறார் விஜய்.

பார்த்திபனாக வாழ்ந்து வரும் இவருக்கும், லியோவிற்கும் என்ன சம்பந்தம்? இவர் பார்த்திபனாக நடித்து ஊரையும் உலகையும் ஏமாற்றுகிறாரா? ஏன் தாஸ் & Co லியோவை கொல்ல முயற்சி செய்கிறார்கள்? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் விஜய்யை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ். இதுவரை நாம் பார்க்காத ஒரு விஜய்யின் நடிப்பை கண்டிப்பாக லியோ படத்தில் பார்க்கலாம். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் விஜய். இதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் படத்தை பார்க்கலாம் என்ற அளவிற்கு இருந்தது விஜய்யுடைய உழைப்பு. முற்றிலும் மாறுபட்ட நடிப்பாக இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும், விஜய் நம்மை ஏமாற்றவில்லை.

திரிஷாவின் நடிப்பு பக்கா. கில்லி, திருப்பாச்சி படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி சக்ஸஸ் ஆகியுள்ளது. குறிப்பாக விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே நடக்கும் எமோஷ்னல் காட்சியை அழகாக வடிவமைத்திருந்தார் லோகேஷ். வில்லன் சஞ்சய் தத் தோற்றமே நம்மை மிரள வைக்கிறது.

அதே போல் வில்லன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மாஸ் காட்டிவிட்டார். விஜய் – சஞ்சய் தத் மற்றும் விஜய் – அர்ஜுன் இடையே நடக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்த விதம் சூப்பர். திரைக்கதை ஓட்டத்திற்கு உதவிய கவுதம் மேனன் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது.

மேத்யூ தாமஸ், மடோனா சபாஸ்டியன், மன்சூர் அலி கான், இயல், ஜார்ஜ் மரியம், சாண்டி மாஸ்டர், ஜனனி போன்றவர்களின் கதாபாத்திரத்திற்கு நல்ல ஸ்கோப். ஆனால் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லை. இதில் எதற்காக இவர் என்ட்ரி கொடுத்தார் என்றே தெரியவில்லை. அப்படி இருந்தது அனுராக் காஷ்யப் கேமியோ.

முதலில் லோகேஷ் கனகராஜின் பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள். காலம் காலமாக நாம் பார்த்த அதே கதைக்களம் தான் லியோவும் என்றால் கூட அதில் தன்னுடைய திரைக்கதையால் படம் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளார்.

குறிப்பாக Hyena-வை வைத்து உருவாக்கிய காட்சி, கொஞ்சம் கூட அது VFX இல்லை என்பது போல் வடிவமைத்த விதம் செம மாஸ். அதற்கு VFX-ல் உழைத்த அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சமாக நம் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருப்பதை லியோவில் வரும் இந்த Hyena காட்சி உறுதி செய்கிறது.

அதே போல் சண்டை காட்சிகளை வடிவமைத்த விதமும் சூப்பர். காஃபி ஷாப்பில் நடக்கும் சண்டை மிரட்டுகிறது. அதை தொடர்ந்து விஜய் போடும் ஒவ்வொரு சண்டையையும் பக்காவாக இயக்கியுள்ளார். அதற்கு லோகேஷ் கனகராஜின் பங்கு 30% சதவீதம் என்றால் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு அறிவு மற்றும் சண்டை காட்சியில் நடித்த ஸ்டண்ட் கலைஞர்களின் உழைப்பு 70% சதவீதமாகும்.

விஜய்யின் டைட்டில் கார்டு, இடைவேளை, கிளைமாக்ஸ் LCU கனெக்ட் செய்த விதம் என திரையரங்கை தன்னுடைய இயக்கத்தால் தெறிக்க விட்டு விட்டார் லோகேஷ்.

முதல் பாதி கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் சென்றாலும், இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு குறையாக வந்து நிற்கிறது. மேலும் லியோ கதாபாத்திரத்தை இன்னும் கூட வலுவாக காட்டியிருக்கலாம். இதில் சிறிதாக லோகேஷ் சொதப்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. இவைகளை மட்டும் கொஞ்சம் சரி செய்து இருந்தால் லியோ படத்தில் குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்து இருக்கும்.

மேலும் அனிருத் இசையைப் பற்றி எவ்வளவு தான் பாராட்டுவது. இவருடைய பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி வெறித்தனமாக இருந்தது. ஹாலிவுட் தரத்தில் ஒலிக்கும் I Am Scared பாடல் விஜய்க்கு பக்காவாக பொருந்தியது. அதே போல் வில்லன்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையும் வேற லெவல்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள். பிலோமின் ராஜ் எடிட்டிங் சூப்பர், படத்தை ரசிக்க வைக்கிறது.

பிளஸ் பாயிண்ட்

தளபதி விஜய்யின் நடிப்பு

திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் நடிப்பு

லோகேஷ் கனகராஜின் இயக்கம்

முதல் பாதி

அனிருத் பாடல்கள், பின்னணி இசை

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு

அன்பு, அறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட்

VFX காட்சிகள் – குறிப்பாக Hyena காட்சி

மைனஸ் பாயிண்ட்

இரண்டாம் பாதியில் சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு

லியோ கதாபாத்திரத்தை இன்னும் கூட வலுவாக காட்டி இருக்கலாம்

Related Posts

Leave a Comment