ஐபிஎல் 2023 – ப்ளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகளுக்கு சாதகமான சூழல் ..

by Lifestyle Editor

2023 ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான அணிகள் 10க்கும் மேற்பட்ட போட்டிகளை விளையாடியுள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்று நெருங்கி வருகிறது. எனவே, ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்யும் முதல் 4 இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டாப்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கு முன்பு இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், வெற்றிபெரும் அணிக்கு ப்ளே ஆப் நோக்கி முன்னேறும் வாய்ப்பு பிரகாசம் என்பதால் இரு அணிகளும் வெற்றிபெற்ற தீர வேண்டும் உத்வேகத்தில் மோதின.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது.

150 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் 13.1 ஓவரில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகள் எடுத்து ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

குஜராத் டைடான்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் கிட்டத்தட்ட ப்ளே ஆப் நோக்கி நகரும் சூழலில் உள்ளன. அடுத்து வரும் போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலே இரு அணிகளும் ப்ளே ஆப்பிற்கு முன்னேறி விடும்.

அதேவேளை, அடுத்த இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், மும்பை, லக்னோ ஆகிய அணிகளுக்கும் இடையே தான் மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க கடும் போட்டா போட்டி உள்ளது. ராஜஸ்தானுக்கு இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இரண்டில் வெற்றி பெற்றால் அந்த அணி ப்ளே ஆப்பிற்கு முந்திவிடும். மும்பை மற்றும் லக்னோ அணிக்களுக்கு அடுத்து 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இரு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் உறுதி. அதேவேளே, இந்த இரு அணிகளுமே மே 16ஆம் தேதி மோதவுள்ளதால் நிலைமை கடும் சவாலாக உள்ளது.

புள்ளிப்பட்டியலில் கீழ் பகுதியில் உள்ள ஆர்சிபி, கேகேஆர் ஆகிய அணிகளுக்கும் ப்ளே ஆப்பில் நுழைய ஓராளவு வாய்ப்புகள் உள்ளன. அதற்கு மீதமுள்ள போட்டிகளில் அந்த அணிகள் வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியையும் அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அதேபோல, சன்ரைசர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு மிகவும் மெல்லிய வாய்ப்புகள் தான் உள்ளன. கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு இல்லை என்றே சொல்லி விடாலம். அந்த அணி தனது கவுரவத்தை காப்பாற்ற மீதமுள்ள போட்டிகளில் விளையாடும்.

Related Posts

Leave a Comment