திருமந்திரம் – பாடல்1699 : ஆறாம் தந்திரம் – 14

by Lifestyle Editor

பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சீராரு ஞானத்தி னிச்சை செலச்செல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றா
ராராயு ஞானத்த னாமடிவைக் கவே.

விளக்கம் :

பாடல் #1698 இல் உள்ளபடி குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம் இதுவரை உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப் போக விலகிப் போக அவற்றின் மேல் இனி பற்று வராது. அந்த பற்றானது இறைநிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாக கூடி வரும். அதன் பிறகு இதுவரை அவரது கைக்கு சரிவர கிடைக்காத சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப் படும்படி பேறு பெறுவார். அதன் பிறகு அக (உள்ளுக்குள்ளும்) புற (வெளியிலும்) ஆராய்ச்சியின் மூலம் ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்.

நான்கு விதமான சாதகங்கள்:

1. சாந்தி – அசைவற்ற நிலையில் சாதகம் செய்தல் / பேரமைதி
2. தாந்தி – எண்ணங்களற்ற நிலையில் சாதகம் செய்தல் / மன அடக்கம்
3. உபாதனை – வினைகளை சாதகம் செய்து எரித்து தீர்த்தல்
4. தீட்சை – சந்தேகம் வரும் போது சாதகத்தின் மூலம் ஒரு கண நேரத்தில் குரு வார்த்தை கேட்டல்

Related Posts

Leave a Comment