காலை சிற்றுண்டி திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – அமைச்சர் உதயநிதி

by Lifestyle Editor

காலை சிற்றுண்டி திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் காமராஜர் காலத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டத்தை விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கல்வித்துறையில் மாபெரும் மைல்கல்லான முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டத்தினை விழுப்புரம் – மருத்துவமனை வீதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறினோம். இத்திட்டத்தின் செயலாக்கத்திற்குப் பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறியது மகிழ்ச்சி அளித்தது. இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டத்தை விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம். மாணவர்களுடன் அமர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment