ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..

by Lifestyle Editor

ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்து திரும்பிய சுபஸ்ரீ என்பவர் மாயமான நிலையில் , இன்று செம்மேடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர் பழனிகுமார் என்பவரது மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த சுபஸ்ரீ கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். அவரை அழைத்துச் செல்வதற்காக கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்திற்கு சென்றபோது, அங்கு அவரைக் காணவில்லை. பின்னர் அங்கிருந்த சிசிடிவி கார்டிகளை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் கால் டாக்ஸி ஒன்றில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த கால் டாக்ஸி ட்ரைவரிடம் விசாரித்த போது இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அவர் செம்மேடு பகுதியில் சாலையோரம் பதட்டத்துடன் ஓடும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில் அவரது கணவர் அளித்த புகாரின்பேரில் அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி மாயமானார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. போலீசார் கிட்டத்தட்ட 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வாரம் கடந்த நிலையில், அதே செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்திற்கு சொந்தமான கிணற்றில் ஒரு பெண் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசி வருவதாகவும் தகவல் கிடைத்தது. அந்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுபஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், கையில் அணிந்திருந்த ஈஷா மோதிரத்தை வைத்து அது சுபஸ்ரீ தான் என்பதை அவரது கணவர் உறுதி செய்தார். இதனையடுத்து அவரது இறப்பின் பிண்ணனி குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment