உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய அணிக்கான வாய்ப்பு பிரகாசம்

by Lifestyle Editor

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மோமினுள் 84 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியா இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 93 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்தியா வெற்றி சதவீதத்தை அதிகரித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் இந்திய அணி தற்போது 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. நாளை ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு அதிகமாகும். இதனால் அந்த போட்டி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment