மூன்றாவது முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தியது ஆர்ஜெண்டீனா!

by Lankan Editor

கட்டாரில் நடைபெற்ற 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜெண்டீனா அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

லுஸைல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பிரான்ஸ் அணியும் ஆர்ஜெண்டீனா அணியும் மோதின.

போட்டி தொடங்கிய 23ஆவது நிமிடத்தில் ஆர்ஜெண்டீனா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி தலைவர் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா ஆர்ஜெண்டீனா அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டீனா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் மீண்டெழுந்த பிரான்ஸ், ஆக்ரோஷமாக விளையாடியது. இதன்படி, போட்டியின் 80ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

அடுத்த ஒரு நிமிடத்தில் அபாராமான கோலொன்றை அடித்து கோல்கள் கணக்கை 2-2 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது. இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108ஆவது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் ஆர்ஜெண்டீனா முன்னிலை பெற்றது. 118ஆவது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதன்மூலம் அவர் ஹெட்ரிக் கோல் அடித்தார். இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

கோல்கள் கணக்கு மீண்டும் சமநிலைப் பெற்றதால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் ஆர்ஜெண்டீனா வெற்றி பெற்றது.

கடந்த 1978ஆம் மற்றும் 1986ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜெண்டீனா மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

சம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜெண்டீனா அணிக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

Related Posts

Leave a Comment