இந்த திட்டத்தை மீண்டும் கொண்டுவரனும் .. பிரதமருக்கு லெட்டர் எழுதிய முதல்வர் ..

by Lifestyle Editor

1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்தில், “29-11-2022 நாளிட்ட ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வி (1 முதல் 8ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது என்று தெரிவித்துள்ளது. இதனால் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவராகிறார்கள். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப்பை சார்ந்த குழந்தைகளிடையே தொடக்க கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு, 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்.

ஒன்றிய அரசு 2008-2009ம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ், 2021-2022ம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு 86.76 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவினால், தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சுமார் ஐந்து லட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகையின் பயன்களை பெற இயலாமல் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவியாகும். சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பதை பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

அதோடு, இந்த கல்வி உதவித்தொகை ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உட்பட, மிகவும் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் தரமான கல்வியை பெறுவதற்கும் உதவிகரமாக இருப்பதால், இது தொடரப்பட வேண்டும். எனவே, 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தினை கைவிடும் முடிவை ஒன்றிய அரசு நிறுத்திவைத்து, உடனடியாக அந்த திட்டத்தினை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment