கவலைகளையெல்லாம் போக்கக்கூடிய கார்த்திகை மாத சிவராத்திரி…

by Lifestyle Editor

கார்த்திகை மாத சிவராத்திரியை கவலைகளையெல்லாம் போக்கக்கூடிய சிவராத்திரி என்றும் சொல்லுவார்கள். செவ்வாய்க்கிழமையில் வரும் கார்த்திகை சிவராத்திரியில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால் நம் கவலைகளையெல்லாம் நீக்கிவிடுவார் தென்னாடுடைய சிவனார் என்பது ஐதீகம்.

மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். இந்த நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபட்டால் சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் வரும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி விரதமும் வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரிவிரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது.

இன்று செவ்வாய்க்கிழமை கார்த்திகை மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், காலையும் மாலையும் சிவனாரை வழிபடுவது சிறந்தது. அத்துடன் உணவு தானம் அளிப்பதும் நல்லது. இந்த நாளில் விரதம் இருப்பதை விட தானம் செய்வது உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் உணவு அளியுங்கள்.

சிவராத்திரி வழிபாட்டின் மகிமைகள்:

1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

Related Posts

Leave a Comment