நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்…

by Column Editor

தமிழகத்திலுள்ள நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரன் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கவனத்தை ஈர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19-3-2022)கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், ‘குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன்’ சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமை பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குனர் அவர்கள் மத்திய அரசின் கடிதத்தின் எண் மூலம் (எண் 12016/S/2011- C&LM – 1, நாள் 30-4-2013)தெரிவித்திருந்ததை பிரதமர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965-ம் ஆண்டிலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு 1967-ம் ஆண்டிலும் இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின் தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment