தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும்!!

by Column Editor

தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2022 -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை தமிழக நிதியமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். . பட்ஜெட் உரையில் இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதை குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதிநிலை அறிக்கையை வாசித்த பின்பு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையை முடித்துக்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர். மற்றொருபுறம் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம், செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி பங்கேற்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் வரும் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அவை அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment