இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையை பொய்களை கூறி ஏமாற்றுகின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை

by Lankan Editor
0 comment

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக சர்வதேசத்திற்குக் காண்பிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, உண்மை நிலரவத்துடன் ஒப்பிடுகையில் சர்வதேச சமூகத்திற்குக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என்றும் அச்சபை குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளும் சரியான முறையில் இடம்பெறுகின்றன என்பதை மனித உரிமைகள் பேரவைக்கும் ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் காண்பிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது என்றும் அச்சபை சாடியுள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆவணப்படுத்தல் வடிவிலான அறிக்கையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது.

காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் முதலாம், இரண்டாம் கட்ட ஆய்வுகளின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு அடுத்ததாக உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடு இலங்கை என்றும் இதுவரை 6,259 வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும் இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் 60 ஆயிரம் அல்லது ஒரு இலட்சம் வரையிலான வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று தாம் மதிப்பிட்டுள்ளதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts

Leave a Comment