நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு!!

by Column Editor

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையானது வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இரண்டாவது அலை தற்போது மோசமாக இல்லை என்றும், இதனால் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் ஆணையத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தான் மனுதாரர்கள் அணுகவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். அத்துடன் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதேபோல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சூழலில் தேர்தல் நடத்துவதற்கான தடை எதுவும் இல்லாததால் உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் இன்றுடன் நிறைவு செய்யும் முடியும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது. ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிகுமார் இன்று வெளியிடுகிறார். தேர்தல் அட்டவணை தயாராக உள்ளதாக நேற்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியது. இதன் எதிரொலியாக இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை வெளியாகிறது.

Related Posts

Leave a Comment