முட்டை கபாப்

by Column Editor

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் முட்டையைக் கொண்ட கபாப் செய்து கொடுங்கள். இந்த முட்டை கபாப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு இது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுக்க ஏற்ற ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை கபாப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டை – 6

* கடலை மாவு – 150 கிராம்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 கையளவு (பொடியாக நறுக்கியது)

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

* பிரட் தூள் – 1 கப்

* தண்ணீர் – 1/2 கப்

* எண்ணெய் – 1 1/2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* முட்டை நன்கு வெந்ததும், அதை இறக்கி முட்டையின் ஓட்டை நீக்கி விட வேண்டும். பின் வேக வைத்த முட்டைகளை ஒரு பெரிய பௌலில் துருவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பௌலில் பிரட் தூளை தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, 1-2 டேபிள் ஸ்பூன் நீரை மட்டும் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரை சேர்த்து விட வேண்டாம்.

* பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையை சுவை பார்த்து, உப்பு, காரம் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து, ஒவ்வொன்றையும் பிரட் தூளில் பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்தையும் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முட்டை கபாப் தயார்.

குறிப்பு:

* முட்டை கபாப் இன்னும் சுவையாக இருக்க வேண்டுமென நினைத்தால், அதில் சிறிது துருவிய சீஸ் அல்லது பன்னீரை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

* விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment