3 வார அதிரடி ஆபரேஷன்.. 6,623 பேர் கைது..! கஞ்சா, குட்கா, லாட்டரி சமூக விரோதிகளுக்கு காப்பு..! அசத்தும் தமிழ்நாடு காவல்துறை.!!

by Lifestyle Editor

தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷன் கஞ்சா வேட்டையின் கீழ் 3 வாரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல் துறையினர் சார்பில் கடந்த டிச. 6 ஆம் தேதி முதல் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு “ஆப்ரேசன் கஞ்சா வேட்டை” என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன்படி, சுமார் 6,623 குற்றவாளிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்

கடந்த 3 வாரத்தில் கஞ்சாவை விற்பனை செய்ய கடத்தியதாக 816 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 871 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா மற்றும் 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை மொத்த வியாபாரியான பெரியசாமி, ஸ்ரீனிவாசன் ஆகியோரை ஆந்திராவில் வைத்து நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனால் தமிழகத்தில் கஞ்சா விற்பனை பெருமளவு முடக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இதனைப்போல, மதுரையில் 21 கிலோ கஞ்சா, தஞ்சாவூரில் 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா கடத்திய 5,457 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,037 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.4.20 கோடி மதிப்புள்ள 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பூந்தமல்லியில் 1,200 கிலோவும், திருச்சியில் 540 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட லாட்டரி தொடர்பாக 816 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,091 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.35.40 இலட்சம் மதிப்புள்ள லாட்டரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா, லாட்டரி போன்றவை விற்பனை நடந்ததால் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 100, 112, 10581 என்ற காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், முகநூல் (https://www.facebook.com/tnpoliceofficial) மற்றும் ட்விட்டர் (@tnpoliceoffl) வலைத்தளங்களில் தெரிவிக்கலாம் என்றும், வாட்ஸப்பில் 94981 11191 என்ற எண்ணை சேமித்து புகைப்பட ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment