அவமானங்கள் முதல் அசாத்திய வெற்றி வரை… விஜயின் 29 ஆண்டு கால சினிமா பயணம்… வைரல் போஸ்டர்!

by Column Editor

விஜய் 29 ஆண்டுகள் சினிமா பயண நிறைவை குறிக்கும் விதமாக வெளியான புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தந்தை இயக்குனர் என்பதால் சினிமாவில் எளிதாக நுழைந்துவிட்ட விஜயால் மக்கள் மனதில் அவ்வளவு எளிதாக இடம் பிடிக்க முடியவில்லை. வந்த புதிதில் அவரது தோற்றத்தை வைத்து விமர்சிக்கப்பட்டார். பின்னர் அதையே தனக்கான உத்வேகமாக எடுத்துக்கொண்டு கடின உழைப்பின் மூலம் இன்று இந்தியாவின் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர் என்ற உயரத்தை அடைந்துள்ளார்.

1992-ம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார். விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ திரைப்படம் தான் அவரது சினிமா கேரியரைத் திருப்பிப் போட்டது. பின்னர் காதலை மையப்படுத்தி உருவான பல படங்கள் மூலம் ரசிகர்களை சேர்த்த அவர் பகவதி படத்தின் மூலம் ஆக்ஷனில் நுழைய ஆரம்பித்தார்.

பின்னர் தரணி இயக்கத்தில் நடித்த ‘கில்லி’ மெகா ஹிட் வெற்றி பெற்று விஜய் கமர்சியல் ஹீரோவாக மக்கள் மனதில் பதியச் செய்தது. இப்படியாக படிப்படியாக வளர்ந்து தற்போது இமயம் போல் வளர்ந்து நிற்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அவரது ரசிகர்கள் பல போஸ்டர்களை வெளியிட்டு வந்தனர். அதில் சில போஸ்டர்கள் மிகவும் வைரலாகின.

அதில் குறிப்பாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய் மாஸ்டர் விஜய் தட்டிக் கொடுப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் இளைய விஜய் கையில் ஒரு வார இதழை வைத்துள்ளார்.

விஜய் தான் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்தது. “இந்த மூஞ்சியை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டுமா” என்று பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அவமானத்தை தாங்கிக் கொண்ட தனது சினிமா கேரியரில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனவே அதைக் குறிக்கும் விதமாக கையில் வார இதழ் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து தற்போது அவர் மக்கள் கொண்டாடும் நடிகராக மாறியுள்ளதை குறிக்க பீஸ்ட் போஸ்டரின் முன் ரசிகர்கள் ஆரவாரம் செய்யுமாறும் காணப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

Related Posts

Leave a Comment