உஷார் மக்களே! செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு

by Lifestyle Editor

சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஏரியை இன்று பிற்பகலில் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பல ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகள் தீவுகள் போல் மாறியுள்ளன. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு நீர் திறக்கப்பட உள்ளது.

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.30 அடியாக உள்ளது. இந்த நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்பதை கருத்தில் கொண்டு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது. அணையின் நீர்வரத்து தற்போது 600 கன அடியாக உள்ள நிலையில் 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. எனவே ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக நீர் திறப்பை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment