தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி!

by Column Editor

கிருஷ்ணகிரி அருகே விவசாய தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பிதிர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(13). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் வினோத்குமார், நாகம்மாள் உள்ளிட்டோருடன், அருகில் உள்ள வராகசந்திரம் கிராமத்தில் நேற்று கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(40) என்பவரது தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி சந்தோஷ் குளிக்க முயன்றார்.

தொட்டியில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் நீச்சல் தெரியாமல் சந்தோஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அந்த பகுதி இளைஞர்கள் தொட்டியில் இறங்கி தேடியபோது சிறுவன் சந்தோஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார், சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment