குக் வித் கோமாளியில் போட்டியாளராக களமிறங்கும் டிடிஎப் வாசனின் காதலி…!

by Lifestyle Editor

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் அந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதுவரை நான்கு சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி உள்ளார். அவர் செஃப் தாமு உடன் இணைந்து இந்த சீசனில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். இந்நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ளது.

ஏற்கனவே வெளிவந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ பிரம்மாண்டமாக இருந்த நிலையில், முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பல்வேறு புதுமைகளும் காத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த சீசனில் ராமர் கோமாளியாக களமிறங்க உள்ளார். இதுதவிர புகழ், சுனிதா, குரேஷி ஆகியோரும் இடம்பெற்று இருப்பதால் இந்த சீசனில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர்.

அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினி பிரியங்கா, பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிரெண்டிங் நடிகை திவ்யா துரைசாமி, புகழ்பெற்ற யூடியூப்பரான முகமது இர்ஃபான், பிக்பாஸ் பிரபலங்களான பூர்ணிமா ரவி மற்றும் தினேஷ் கோபால்சாமி ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே கசிந்த நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் மற்றுமொரு ஹீரோயினும் இடம்பெற்று இருக்கிறார்.

அவர் வேறுயாருமில்லை, நடிகை ஷாலின் சோயா தான். இவர் யூடியூப்பர் டிடிஎப் வாசனுடன் நெருங்கி பழகி வருவதால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் உலா வந்தன. நடிகை ஷாலின் சோயா கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவர் தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய சீசன்களில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர் வரிசையில் ஷாலின் சோயாவும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment