கமர்ஷியல் ஹிட் படமான கில்லி ரீ-ரிலீஸ் எப்போ தெரியுமா?

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் தற்போது புதுப்படங்களை விட பழைய படங்களுக்கு தான் அதிக மவுசு உள்ளது. புதுப்படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்து வருவதால், திரையரங்க உரிமையாளர்கள் பழைய படங்களை திரையிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்கள் சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. அதற்கு வரவேற்பும் பெரியளவில் இருந்தது. இதனால் அதனை கே டிவி என்றெல்லாம் கிண்டலடித்து மீம்ஸ் போடப்பட்டன.

அந்த ரீ-ரிலீஸ் டிரெண்ட்டை தமிழகம் முழுவதும் பரப்பும் வண்ணம் பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த பையா படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அதன் 14 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ரீ-ரிலீஸ் பற்றி பேச்சு எழுந்ததும், ரசிகர்கள் அதிகளவில் விரும்பி கேட்ட படம் என்றால் அது கில்லி தான். அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யக்கோரி கோரிக்கையும் வலுத்தன. இந்த நிலையில், ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அதன்படி அப்படம் வருகிற ஏப்ரல் 20-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கில்லி படத்தை தரணி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக பிரகாஷ் ராஜும் நடித்திருந்தனர். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருந்தார். தொலைக்காட்சியிலேயே எத்தனை முறை ஒளிபரப்பினாலும் டிஆர்பியில் பட்டைய கிளப்பும் கில்லி திரைப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் ஆக உள்ளதால் எந்த அளவுக்கு வசூல் சாதனை படைக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் அன்றைய தினம் அப்படத்துக்கு போட்டியாக எந்த ஒரு தமிழ்படமும் ரிலீஸ் தேதியை அறிவிக்காததால் கில்லி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment