காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா..

by Lifestyle Editor

காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணுப் பண்டிகை என்கிற பெயர்களும் உண்டு. கன்னிப்பொங்கல் என்கிற பெயரிலேயே விளக்கம் ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது.

ஆம்! காணும் பொங்கல் திருநாளானது திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஒரு நாள் ஆகும். எனவேதான் இது கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாளின் மாலை நேரத்தின் போது, திருமணமாகாத பெண்கள் அனைவரும், ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையிலெடுத்துக் கொண்டு ஓரிடத்தில் கூடுவார்கள். அந்த தாம்பூலத்தில் கரும்புத்துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் போன்றவைகள் இருக்கும்.

பின்னர் எல்லோரும் கும்மியடித்து பாட்டு பாடிக்கொண்டே தங்கள் ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை என ஏதாவது ஒரு நீர்நிலையை நோக்கிச் செல்வார்கள். அங்கே கற்பூரம் ஏற்றி இறைவழிபாடு செய்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வர்.

இந்த நோன்பானது உடன்பிறந்த சகோதரர்களுக்காக காணும் பொங்கலன்று பெண்கள் செய்யும் ஒரு வகை நோன்பு ஆகும். இதன் கீழ் உடன்பிறந்த சகோதரர்களின் வாழ்க்கை நலமாக இருக்கும்படி அவர்களது சகோதரிகள் வேண்டிக் கொள்வார்கள்.

அண்ணன்களுக்காக இந்த நோன்பை செய்ய விரும்பும் சகோதரிகள், ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டின் மொட்டை மாடியிலோ கோலமிட்டு, இரண்டு வாழை இலைகளை கிழக்கு நோக்கி பார்த்தபடி வைத்து, ஐந்து வகை சாதங்களை சமைத்து வைத்து தத்தம் சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டு, பின் தீபமேற்றி ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும் / வழிபட வேண்டும்.

பிரியப்பட்டவர்களை காணுதலும், காணும் பொங்கல் தான்

காணும் பொங்கல் என்கிற பெயருக்கும் ஒரு வெளிப்படையான, எளிமையான விளக்கம் உள்ளது. அது காணுதல் ஆகும். ஆம்! பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலின் போது, நாம் நமது உற்றார், உறவினர், நண்பர்களை “காணுதல்” மற்றும் பெரியவர்களை கண்டு அவர்களிடம் ஆசி பெறுவதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

ஏனெனில் திருமணமான பெண்களுக்கு காணும் பொங்கல் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். பொங்கல் பானையில் கட்டிய புது மஞ்சள் கொத்தினை எடுத்து வயது முதிர்ந்த தீர்க்க சுமங்கலிகள் ஐந்து பேரின் கைகளில் அதை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதும், பின்னர் அதே மஞ்சளை கல்லில் வைத்து இழைத்து பாதத்திலும் முகத்திலும் பூசிக்கொள்ள வேண்டும் என்பதும் நாம் அறியாத ஒரு காணும் பொங்கல் வழக்கமாகும்.

மேலும் காணும் பொங்கலன்று பல்வேறு வகையான சிறுபிள்ளை தனமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். உடன் உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகளும் நடத்தப்படும். சுவாரசியமாக காணும் பொங்கலன்று பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Related Posts

Leave a Comment