மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை

by Column Editor

பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத்தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாணவர்களிடம் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment